இந்தியாவில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டோல் கட்டணம் தருவது அதிகரித்திருக்கிறது. இது, தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் குறிப்பிடும்படி அதிகரித்திருப்பதாக மத்திய அரசின் தரவுகள் சொல்கின்றன. இதற்கு முக்கிய காரணம் ஃபாஸ்ட்டேக்.
டோல் பிளாசாவில் வாகன நெரிசல் ஏற்படுவதை தடுக்க மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதுதான் ஃபாஸ்ட்டேக். வாகனத்தில் RF ஐடி பொருத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்பட்டிருக்கும். இந்த ஸ்டிக்கரை ஸ்கேன் செய்வதன் மூலம் அந்த குறிப்பிட்ட வாலெட்டில் இருந்த டோல் தொகை தானாகவே டெபிட் ஆகிவிடும். இதனால், வேகமாக டோல் கட்டணம் பெறப்பட்டு வாகன நெரிசல் குறைகிறது.
இந்தியாவில் தற்போது 539 சுங்கச்சாவடிகள் ஃபாஸ்ட்டேக் முறையில் கட்டணம் வாங்குகின்றன. ஃபாஸ்ட்டேக்கின் பயன்பாட்டை இன்னும் அதிகரிக்கவேண்டும் என்பதற்காக இதை பெட்ரோல் மற்றும் பார்க்கிங் கட்டணங்களுக்கும் பயன்படுத்த முயற்சி செய்துவருகிறோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.